Skip to content

மதுபான லாரி – கார் மோதி கோர விபத்து…டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில், லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று அதிகாலை கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு மதுபானம் ஏற்றிச் சென்ற லாரியை, அகில் கிருஷ்ணன் (30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் இருங்கடன்பள்ளி அருகே லாரி வந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது மோதிய லாரி, அடுத்த வினாடியே சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

இந்தக் கோர விபத்தில் லாரி ஓட்டுநர் அகில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் கொண்டு வரப்பட்ட சுமார் 700 பெட்டிகளிலிருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் நொறுங்கியதால், மதுபானம் சாலையில் ஆறாக ஓடியது.

தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த கார் ஓட்டுநரை மீட்டு கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அகில் கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கார் ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!