சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 6.30 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். அதிகாரிகள் உள்ளே புகுந்தவுடன் மெயின் கேட்டை இழுத்து பூட்டினர். அப்போது அமைச்சரின் வீட்டு வரவேற்பரையில் 60 வயது மதிக்கத்தக்க ராஜேந்திரன் என்ற திமுக தொண்டர் ஒருவர் இருந்தார்.
அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை சிறிது நேரம் கழித்தே புரிந்து கொண்டு, நான் மன்னார்குடியில் இருந்து வந்திருக்கிறேன். அமைச்சரிடம் மனு கொடுக்க வந்தேன், நான் வெளியே போக வேண்டும் என்றார். அதற்கு அமலாக்கத்துறையினர் வெளியே போகக்கூடாது எனக்கூறி, அவரது செல்போனையும் பறித்துக்கொண்டனர்.
தான் ஏற்கனவே இருதய ஆபரேசன் செய்தவர், எனக்கு மயக்கமாக இருக்கிறது, குடிக்க ஏதாவது கொடுங்கள், டிபன் தாருங்கள் என்றார். அதற்கு அமலாக்கத்துறையினர் எதுவும் தரமுடியாது. இங்கிருந்து நகரக்கூடாது சோதனை முடிந்த பிறகுதான் உங்களை விடுவோம் என்றனர். காலை 11 மணி வரை அவர் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. பசியாலும், அமலாக்கத்துறையினர் மிரட்டியதாலும் அவர் மயக்கமுற்றார்.
அதைத்தொடர்ந்து அவரை கேட் அருகே ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அவருக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த அரக்கத்தனத்தால் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர்.