2026 சட்டமன்றத் தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை நாங்கள் பாஜக கூட்டணிக்கு வர மாட்டோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக அறிவித்தார். சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருந்தால் கூட்டணியில் தொடர மாட்டோம் என எழுத்துப்பூர்வமாகவே பாஜகவிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், ”எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தே.ஜ.கூட்டணிக்கு வரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பில்லை.
NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி தொடர்கிற பட்சத்தில் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது. அண்ணாமலை முயற்சியால்தான் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தோம்” என்றும் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசர முடிவல்ல, நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு என்றும், அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷாவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் தினகரன் விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அமமுகவின் முடிவு டிசம்பரில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு இல்லை எனவும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். ஆனால், இபிஎஸ் தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணியில் இணைப்பதற்கு ஒப்புக்கொண்டாலும், தினகரனை இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு எதிராகவும், அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் மட்டுமே ஆதரவு அளிக்கத் தயார் எனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.