மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு வரவேற்கத்தக்க எந்த விஷயமும் இல்லாவிட்டாலும், வழக்குக்கு பயந்து அதனை வரவேற்று அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்து விட்டார்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காட்டம்.
அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்ருமான எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பின்னர் புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்களை வரவேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய தன்மானத்தை காக்கின்ற, முதல் தளகர்த்தராக செயல்பட்டு வருகிறார். மோடி தலைமையிலான அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்ற வேளையில், அவர்களை தட்டி கேட்கின்றவராக, அவர்களிடத்தில் எதிர்த்து குரல் கொடுக்கிறவராக, தமிழ்நாட்டுடைய உரிமைக்காக குரல் கொடுக்கின்றவராக நம்முடைய முதலமைச்சர் தான் இருக்கிறார்.
இன்றைக்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் மக்களுக்கு நன்மை பயக்கின்ற, ஏழை மக்களுக்கான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கும் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. அதை நம்முடைய முதலமைச்சர்தான், இன்றைக்கு கேள்வி கேட்டிருக்கிறார்.
ஆனால், அதிமுகவின் தலைவராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி அதில் வரவேற்பதற்கு எந்த விஷயம் இல்லாவிட்டாலும், அதில் ஏதோ ஒரு விஷயம் இருப்பது போல வரவேற்பு கொடுக்கிறார். காரணம், இன்றைக்கு அவர் வழக்கு சம்பந்தப்பட்டு மாட்டிக் கொண்டிருப்பதால், மோடிக்கு பயந்து கொண்டு போய் அதிமுகவை அங்கு அடமானம் வைத்து விட்டார்.
அதிமுக ஒரு காலத்தில் மறைந்த மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் தலைமையிலும், மரியாதைக்குரிய அம்மையார் ஜெயலலிதா தலைமையிலும்
ஒன்றிய அரசுகளை எதிர்த்து நிற்கின்ற வகையில், மாநில சுயாட்சிக் கொள்கையிலே நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப்போலவே விட்டுக் கொடுக்காமல் இருந்தவர்கள்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையாமல் தடுத்தவர், முத்தமிழர் கலைஞர். அதைப் பின்பற்றி மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் நீட் தேர்வு தமிழகத்தில் உள்ளே நுழையாமல் வைத்திருந்தார். ஆனால் அவர் மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டில் நீட் தேர்வு வந்தது. மின்சாரத்தை ஒன்றிய அரசாங்கம் கட்டுப்படுகின்ற உதய் மின் திட்டம் வந்தது.
ஒவ்வொரு துறையும் மத்திய அரசாங்கத்துடைய கைப்பிடிக்குள் கொண்டு போய் வைத்துவிட்டு, இன்றைக்கு நமக்கு வரவேண்டிய நிதி வரவில்லை. நமக்கு வரிப்பணத்தில் பங்கு வரணும், அந்தப் பங்கை ஒரு மாநிலத்திற்கான பங்கை தராமல் ஏமாற்றுகிறார்கள். கல்விக்கு தரவேண்டிய 3500 கோடி தராமல் வைத்துள்ளது மோடி அரசாங்கம்.
ஏனென்று கேட்டால் மும்மொழி கொள்கையை, நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள். நாம் இருமொழி கொள்கையை தான் கடைப்பிடிப்போம் என் அண்ணா அவர்களால் 1967-ல் திமுக முதன்முதல் ஆட்சிக்கு வந்தவுடன் அமல்படுத்தினோம். அதைத்தான் இன்றைக்கும் நாம் பின்பற்றுகிறோம்.
இந்தியாவிற்கு இன்றைக்கு இந்த கொள்கைதான் வழிகாட்டியான கொள்கை என்று பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் ஆரம்பித்து மேற்குவங்கம் வரைக்கும், நம்மை பின்பற்றுவதற்கு முன் வருகிறார்கள். ஆனால் எப்படியாவது மீண்டும் இந்தியை நம் மீது திணிக்க வேண்டும் என்று மோடி துடிக்கிறார். அதை எதிர்த்து கேட்ட காரணத்தால், பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டிய நிதி, நம்முடைய பிள்ளைகள் படிப்பதற்கான நிதி அந்த நிதி ரூ.3500 கோடியை கொடுக்கவில்லை.
நாம் வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உண்டு. அதில் ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும். அதில் நமக்கு வரவேண்டிய பங்கை ஒழுங்காக தரவில்லை. 100 நாள் வேலைக்கு பணம் தராமல் இருந்து நம்ம எல்லாம் போராடித்தான் அதைக் கேட்க வேண்டிய நிலை இருந்தது. 100 நாள் வேலையை அதற்கான நிதியை குறைத்து, அரசாங்கம் மாநில அரசாங்கம் பணம் தரவேண்டும் என்று மோடி சொல்கிறார்.
நம்முடைய பணத்தை எல்லாம் இன்றைக்கு கொள்ளையடிக்கின்ற அரசாக, மத்திய அரசாங்கம் இருக்கிறது. இதை எதிர்த்து கேட்க வேண்டும் என்றால் நம்முடைய முதலமைச்சர் தான் இன்றைக்கு முதல் ஆளாக நிற்கிறார். ஒருபுறம் அதை செய்தாலும், இன்னொரு புறம் மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து நிறுத்தாமல் செய்து வருகிறார். மகளிர் உரிமைத்தொகை தரும்போது எடப்பாடி கிண்டல் பண்ணினார். ஆயிரம் ரூபாய் தர அரசிடம் பணம் உள்ளதா? இவர்கள் மக்களை ஏமாற்ற சொல்கிறார்கள் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
இன்று ஒவ்வொரு மகளிருக்கும் ரூபாய் 28000 வங்கி கணக்கில் சென்ற பின்னர், நாங்கள் ஆட்சிக்குள் வந்தால், ரூபாய் 2000 தருகிறோம் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களை

ஏமாற்றுகின்ற முயற்சியில் எப்படியாவது ஒரு வாய்ஜாலத்தை உண்டாக்கி, ஒரு கதையை சொல்லி ஏமாற்றி மக்களை திசை திருப்ப முடியுமா என்று முயற்சி செய்கிறார் .
ஆனால் அவர் கூட்டணியில் இருக்கின்ற அரசாங்கம், மத்திய ஒன்றிய மோடி அரசாங்கம் நமக்கு தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லையெனில் மட்டும், வாய்திறந்து கேட்காமல் அவர்களிடம் கைகட்டிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும், அவருடைய உண்மை ரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்களிடத்திலே நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நம்முடைய முதலமைச்சர்தான் மகளிர் உரிமைத்தொகை தருகிறார். நகரப் பேருந்துகளில் விடியல் பயணம், நம் வீட்டு பிள்ளைகள் படிக்க புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூபாய் 1000 தருகிறார். இது போன்ற திட்டங்கள் இந்தியாவில் வேற எந்த மாநிலங்களும் கிடையாது இன்னும் பல திட்டங்களையும் விரைவில் முதலமைச்சர் கொடுக்க இருக்கிறார். எனவே அவருடைய கரத்தை வலுப்படுத்துவது நம்முடைய கடமை என உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அரியலூர் மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன், திருமானூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, அசோக சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

