Skip to content

பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

 அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இதில்  அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தன்னை அதிமுக உறுப்பினர் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரியமூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிப்படி பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
error: Content is protected !!