அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமுழியம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் (55) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை, நேற்று இரவு அக்கிராமத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு அவரது உறவினர்கள் உள்ளிட்ட 3பேர் ஈடுபட்டனர். இன்று காலை ராமதாஸின் உறவினர் ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக மயானத்தின் அருகே

சென்றபோது, சிதையில் உடல் சரியாக எரியாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் எரியூட்டியவர்களை அழைத்து, இதுகுறித்து சத்தம் போட்டுள்ளார். இரவில் பெய்த மழையினால் நெருப்பு அணைந்திருக்கலாம் என நினைத்த சக்திவேல் மற்றும் உறவினர்கள்

அறிவழகன்,புண்ணிய மூர்த்தி அவசர அவசரமாக மண்ணெண்ணெய் ஊற்றி அந்த உடலை மீண்டும் முழுமையாக எரியூட்டியுள்ளனர்.
உடலை முழுமையாக எரியூட்டி முடித்த பின்னர்தான், சக்திவேலின் தந்தை தங்கராசுவைக் காணவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. ஒருவேளை எரியூட்டும் பணியின்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், சிதை எரிந்து முடித்த பிறகு சாம்பலை விலக்கிப் பார்த்துள்ளனர். அப்போது அங்கு இரண்டு மண்டை ஓடுகளும், கூடுதல் எலும்புகளும்

இருந்ததைக் கண்டு அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவு பிணத்தை எரியூட்டும்போது தங்கராசு மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் நிலைதடுமாறி எரியும் சிதையின் மீது விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரும்புலிகுறிச்சி காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

