மூதாட்டி உடல் மீட்பு..
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் பார்சல் அலுவலகம் ரோடு ஜங்ஷன் பஸ் ஸ்டாப் அருகே சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார்.இதுகுறித்து திருச்சி கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், அவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் ?எப்படி இறந்தார்? எதற்காக இங்கு வந்தார்? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி விற்ற முதியவர் கைது..
திருச்சி கோட்டை பகுதி கள்ளர் தெரு சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யப்பிரியா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்த குமாரசாமி என்கிற ராஜ் (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன