குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை – மணப்பாறை நெடுஞ்சாலை இரும்பூதிப்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட்டை சேர்ந்த பிளாஸ்டிக் கடை உரிமையாளர் கைலாஷ் என்பவர் ஓட்டி வந்த காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 1,00,000 /- கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து பணத்தினை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான சுவாதி ஸ்ரீ இடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
அதேபோல் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் தாலுகா தேவர்மலை பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கடவூர் அருகே மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தனது காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த இரண்டு லட்சம் ரூபாயை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வசம் ஒப்படைத்தனர்.

