தஞ்சையில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அனைத்து தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அறிந்து மனு வாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் முதல்-அமைச்சர் அனுப்பியிருக்கிறார். அதை ஒட்டி, முதலிலே ஓசூரிலே இந்த தேர்தல் அறிக்கை குழு சென்று அங்கு இருக்கக்கூடிய அலைபேசி உற்பத்தியாளர்கள் , தொழிலாளர்கள் உள்ளிட்ட

அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்தோம். இன்று தஞ்சை, திருவாரூர் ,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தஞ்சையில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் விவசாயிகள், வியாபாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் , தொழிலாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து மனு வாங்கி உள்ளோம். இன்று மாலை திருச்சியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்று அங்கிருக்கக்கூடிய மக்களைச் சந்திக்கவுள்ளோம். இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக உருவாக்குவதற்கு உண்டான வேலைகளைச் செய்து வருகிறோம்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். ஆனால் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது, நிச்சயமாகத் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமில்லாமல், அடுத்த ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றப்போவதும் நாங்கள் தான். கடந்த 2006-ல் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்பட்டது. இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும். நேற்று தஞ்சை செங்கிப்பட்டியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால் மாநாட்டுப் பந்தலுக்குள் கூட வர முடியாத அளவில் பெண்கள் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டார்கள். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஒரு ஆட்சியாக இருக்கிறது. அதனால் பெண்கள் எங்களுடைய பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” என்றார்.

