வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை பேருந்து நிறுத்தம் பின்புறம் 700 ஆண்டு பழமையான அருள்மிகு பிரசன்ன கல்யாண வெங்கட்ராமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் அர்ச்சகர் பூஜை செய்வதற்காக வழக்கம்போல் கோவிலை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது மின் கசிவு காரணமாக மின்சார பெட்டியில் இருந்து அதிகப்படியான புகையுடன் கூடிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
கோவில் உட்பகாரத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சுவாமி திருவீதி உலாவிற்கு பயன்படுத்தப்படும் மரத்தினால் ஆன ஆஞ்சநேயர் வாகனம், கருட வாகனம், நாகப்பாம்பு வாகனம் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

