திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து கடந்த 28.02.2011 பணி ஓய்வு பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், நெய்தலூர், ராஜன் நகர் பகுதியில் இறந்துபோன தனது அப்பா இருளன் பெயரில் இருந்த காசி ரைஸ் பிளவர் மற்றும் ஆயில் மில்லிற்கு மின் இணைப்பு S.C.No.247 உள்ளது எனவும், அந்த மின் இணைப்பிற்கு வரும் ஒயர் மின் கம்பத்திலிருந்து ரைஸ் மில் வரை தொங்கியபடி ஆபத்தான நிலையில் இருந்ததால், மின் விபத்து ஏற்படாமல் இருக்க குளித்தலை, சின்னப்பனையூர் மின் வாரிய அலுவலகத்தின் உதவி பொறியாளரான நாராயணன் என்பவரை அனுகியுள்ளார். அப்போது மின் கம்பம் நடுவதற்கு ரூ.2000/- லஞ்சம் கேட்டதாக 9.8.2011 அன்று சுந்தர்ராஜன் கொடுத்த புகாரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 10.8.2011 அன்று பொறிவைத்து பிடிக்கும் நிகழ்வில் புகார் தெரிவித்த சுந்தர்ராஜனிடம் ரூ.2000/- லஞ்சமாக வாங்கிய குற்றத்திற்கு உதவி பொறியாளர் நாராயணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து இவ்வழக்கு கரூர் சிறப்பு நீதிபதி மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று, இன்று 15.12.2025-ஆம் தேதி நாராயணன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக நாராயணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.10,000/-விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்த தவறினால் 9 மாதம் சிறை தண்டனை விதித்தும், அதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

