தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது. இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. மின் விசிறி, ஏசி வசதி இல்லாமல் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது.
அத்துடன் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. தேர்வு அறைகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும், நீர்நிலைகள் வறண்டு விட்டதால் விவசாயத்திற்கும் கூடுதலாக மின்சாரம் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் கோடை காலம், பட்ஜெட் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.