இன்று சட்டப்பேரவை 4-வது நாளாக கூடிய நிலையில், விவாதங்கள் பல நடந்து முடிந்தது. அதன்பிறகு சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இபிஎஸ் திமுக அரசின் நலத்திட்டங்களை ‘உருட்டு கடை அல்வா’ என்று கடுமையாக விமர்சித்தார். “திமுக அரசாங்கத்தில் உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும். 2021-ஆம் ஆண்டில் தீபாவளியின் போது 525 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. எல்லாத்துக்கும் அல்வா கொடுத்துவிட்டார்” என்று அவர் கூறி, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அடங்கிய ‘உருட்டு கடை அல்வா’ என்ற பாக்கெட்டை வழங்கினார்.
இந்த விமர்சனம், திமுகவின் புதிது புது அறிவிப்புகளை ‘அல்வா’ என்று கேலிச் செய்வதாக அமைந்தது.ஈபிஎஸ், உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கைக்கு பின்னால் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். “WHO எச்சரித்தும் மருந்து உற்பத்தியை அரசு கண்காணிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டது” என்று அவர் கூறினார். திமுக அரசின் நலத்திட்டங்கள் வாக்குறுதிகளாக மட்டுமே இருப்பதாகவும், மக்களுக்கு உண்மையான பயனில்லை என்றும் விமர்சித்தார்.
இந்த விமர்சனத்துக்கு பதிலடியாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எ.வி.வேல். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது “இன்று அல்வா பாக்கெட்டை வைத்துக்கொண்டு ‘உருட்டு கடை அல்லா’ என்றெல்லாம் கதைவிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி” என்று கடுமையாக சாடினார். “அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் கொடுப்போம் என்றார்கள், செல்போன் கொடுத்தார்களா? இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று அவர் விமர்சித்தார். அதிமுகவை திருட்டுக் கடையாக்கியவர் எடப்பாடி என்று சிவசங்கர் கூறி, “அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ் அடிக்க வேண்டிய நிலைக்கு அதிமுக சென்றுள்ளது” என்று கிண்டலடித்தார்.
மேலும், சிவசங்கர், திமுக அரசின் நலத்திட்டங்களை பாராட்டினார். “மக்களிடம் சென்று கேட்டால், நலத்திட்டங்கள் பற்றி அவர்கள் சொல்வார்கள். விடியல் பயணத் திட்டத்தை அண்டை மாநிலங்கள் அமல்படுத்துகின்றன. காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார்” என்று தெரிவித்தார். எத்தனை கூட்டணிகள் சேர்ந்தாலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும் என்று உறுதியளித்தார். அரசின் மீது குறை கூற முடியாமல் தோல்வி முகத்துடன் ஈபிஎஸ் வெளிநடப்பு செய்ததாகவும் விமர்சித்தார். “அதிமுகவை திருட்டுக் கடையாக்கியவர் எடப்பாடி, இப்போது அல்வா பாக்கெட் வைத்து அரசியல் செய்கிறார்” என்று சிவசங்கர் முடிவுரைத்தார்.