Skip to content

இபிஎஸ், பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க வேண்டும்.. உதயநிதி பேச்சு

சென்னை-புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த அவர், அரசியல் எதிரிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். “2026-ல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் தேர்தல் திருவிழாவுக்கு தயாராவோம்” என்று அழைப்பு விடுத்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசை “பாசிச அரசு” என்று விமர்சித்து, சிறுபான்மை மக்களுக்கு எதிராக அது சூழ்ச்சிகள் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், அதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடுவதை உதாரணமாகக் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தை வலியுறுத்திய உதயநிதி, கிறிஸ்துமஸ் அன்று இஸ்லாமியர்களுக்கும் கேக் அனுப்புவது, ரம்ஜான் அன்று பிரியாணி பார்ப்பது, எல்லோரும் ஒன்றாக பொங்கல் வைப்பது போன்ற பாரம்பரியங்களை எடுத்துக்காட்டினார். “தமிழ்நாட்டுக்கு தனி குவாலிட்டி, தனி கேரக்டர் இருக்கிறது” என்று கூறி, அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் கலாச்சாரத்தை பாராட்டினார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை “அமித்ஷாவின் காலில் சரண்டர் ஆனவர்” என்று கடுமையாக விமர்சித்த உதயநிதி, சிறுபான்மை மக்களை பாதுகாப்பேன் என்று பேசும் இபிஎஸ், பாஜகவிடமிருந்து அதிமுகவை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறலாம் என்றாலும், தமிழ்நாட்டில் “உங்கள் பருப்பு வேகாது” என்றும், தமிழ்நாடு எப்போதும் “Out of Control” என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினின் உரை, திமுக அரசின் கொள்கைகளை வலியுறுத்தியதுடன், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தது. இது தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!