கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கோதூர் நல்வாழ்வு மையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குத்துவிளக்கேற்றி வைத்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்திற்கு சிறப்பு திட்டமாக கோதூர், நந்தவனம், திருக்காம்புலியூர், சணப்பிரட்டி ஆகிய 4 இடங்களில் நகர்ப்புற நல வாழ்வு மையம் ரூ-1 கோடியில் அமைக்கப்பட்டு இன்று முதல்வர் அவர்களால் திறக்கப்பட்டு உள்ளது.
‘அதுபோல குளத்தூர் பாளையத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்த நகர்ப்புற நல்வாழ்வு மையமும், ஆரம்ப சுகாதார நிலையமும் திறக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு கவனம் செலுத்தி இதனை கரூர் மாவட்டத்திற்கு வழங்கிய முதல்வர் அவர்களுக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பாகவும், எங்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவை அனைத்தும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக தரப்பட்டுள்ளது. போற்றுதலுக்குரிய இந்த திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.