ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு முட்டையிலும் அதன் காலாவதி தேதியைக் குறிப்பிடுவதை முட்டை உற்பத்தியாளர்கள் கட்டாயமாக்க உள்ளனர். அனைத்து முட்டைகளிலும், அவை இடப்பட்ட தேதியும், எப்போது வரை உண்பதற்குப் பாதுகாப்பானவை என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும் என்று கால்நடை வளர்ப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முத்திரைகள் இல்லாத முட்டைகள் கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படும் அல்லது மனித பயன்பாட்டிற்கு தகுதியற்றது என அறிவிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு முட்டையிலும் அச்சிடுவதற்கு 3-4 பைசா மட்டுமே செலவாகும். இதனால் முட்டை விலை அதிகரிக்காது என்றும். பல பண்ணைகள் ஏற்கனவே அச்சிடும் பணியைத் தொடங்கிவிட்டதாகவும் உத்திரபிரதேச மாநில கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகேஷ் மேஷ்ராம் கூறியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் முட்டைகள் மீது நாங்கள் கவனம் செலுத்துவோம். அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், அந்த முட்டைகள் அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு முட்டையை இட்ட இரண்டு வாரங்களுக்குள் சுமார் 30 டிகிரி செல்சியஸ் சுற்றுப்புற வெப்பநிலையில் சேமித்து வைத்தால் அது உண்பதற்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. அல்லது 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்தால் ஐந்து வாரங்களுக்குள் உண்பதற்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

