தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை வேதகோவில் தெரு பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தனிநபர் விதிமுறைகளை மீறி கேண்டீன் நடத்தி வருவதாகவும், அதில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்வதாகவும், வெளியில் உள்ள கடைகளில் உணவு பார்சல்கள் வாங்கிவந்து அதனை கூடுதல் விலைக்கு விற்று வருவதாகவும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில் நேற்று தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் அருண் உத்தரவின்பேரில், கயத்தாறு உணவு பாதுகாப்பு அலுவலர் ஹரிஞானசந்தியா மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கே உணவு பாதுகாப்பு துறை அனுமதி இல்லாமலும், விதி முறைகளை மீறியும் கேன்டீன் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அங்குள்ள உணவு பொருட்களை ஆய்வு செய்ததில் சில பாக்கெட்டில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து கேண்டீன் நடத்திய நபருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அனுமதி வழங்காமல் கேன்டீன் நடத்த கூடாது என பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல் கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும் சென்ற அதிகாரிகள் அங்குள்ள கேண்டீனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேன்டீனிலும் தரமற்ற உணவு பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறி கேண்டீன் நடத்துவது மற்றும் தரமற்ற உணவு பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு விற்றால் அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.