கரூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் போட்டுக் கொடுத்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது – கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை.
கரூரில் போலியான பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை தயாரிக்கும் மோசடி கும்பல் குறித்து, கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கரூர் நகரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் நகர காவல்துறையின் உதவியுடன் நடைபெற்ற இந்த சோதனையில் தனிப்படை போலீசார், கரூரைச் சேர்ந்த ஜெயகுமார் (முகவர்), கார்த்திக் (ஆதார் பதிவு அலுவலர்), நவீன், சம்பத், ஸ்ரீனிவாசன் மற்றும் கலைவாணி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்கள் 6 பேரும் போலி பான் கார்டுகளை உருவாக்கி, அதன் மூலம் ஆதார் கார்டுகளுக்கு விண்ணப்பித்து மோசடியில் ஈடுபட்டனர்.
இவர்களிடமிருந்து 130 பான் கார்டுகள், 69 ஆதார் பதிவு படிவங்கள், 1 லேப்டாப், 6 செல்போன்கள் மற்றும் போலி பான் கார்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2000 ரூபாய் முதல் பணத்தை வாங்கிக்கொண்டு, போலியாக ஆதார் அட்டைகள் போட்டுக் கொடுத்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்து, கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணை முடிந்து ஆறு பேரும் நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
