திருச்சியில் ஹெல்த் கேர் நிறுவனம் நடத்தி வரும் பெண்ணிடம், தொழில் கூட்டாளியாக இருந்த நபர் ரூ.45 லட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 2011-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் தீபாவளி சீட்டு போட்டு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை பிரபு திருப்பித் தரவில்லை எனத் தெரிகிறது. அப்போது பிரபுவின் சகோதரரான சசிகுமார், அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் அறிமுகமாகியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண்ணும் சசிகுமாரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கன்டோன்மென்ட் பகுதியில் இருவரும் இணைந்து ‘ஹெல்த் கேர்’ நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்தத் தொழில் ரீதியான பழக்கத்தைப் பயன்படுத்தி, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாக அந்தப் பெண்ணிடமிருந்து சுமார் ரூ.45 லட்சம் பணத்தை சசிகுமார் பெற்றுள்ளார்.
பெற்ற பணத்தைத் திருப்பித் தராமல் சசிகுமார் ஏமாற்றி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டம் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

