தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (30) கோடம்பாக்கத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா (30) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பி.இ. எம்.பி.ஏ பட்டதாரியான அபிநயா சிறுசேரியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே அருண்குமாருக்கும், அபிநயாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் அபிநயாவின் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி அவருடைய செல்போனை எடுத்து பார்த்து வந்துள்ளார். இதனால் அபிநயா வேலைக்கு செல்வதை நிறுத்தி கொண்டார். எனினும் அவர்களுக்கு இடையே தொடர்ந்து தராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி இரவு அபிநயா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவரின் நடத்தை சந்தேகத்தால் ஏற்பட்ட மனவேதனையில் அபிநயா தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் தன் மீது எந்த தவறும் இல்லை என்று பலமுறை எடுத்து கூறியும் அதனை கணவர் அருண்குமார் நம்பாமல் தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து சித்த டாக்டர் அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பெண் என்ஜீனியர் அபிநயா தற்கொலை குறித்து போலீசார் விசாரித்தபோது பல்வேறு உருக்கமான தகவல்கள் கிடைத்தன.
சாப்ட்வேர் என்ஜினீயரான அபிநயாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகம் அடைந்த அருண்குமார் மன ரீதியாக கடுமையான வார்த்தைகளை பேசி துன்புறுத்தி உள்ளார். அடிக்கடி அபிநயாவின் செல்போனை எடுத்து பார்த்து யாரிடம் பேசினாய் என்று விசாரித்தது டன் குறுஞ்செய்திகளை பார்த்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கணவரின் இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அபிநயா பலமுறை அவரிடம் எனக்கு யாருடனும் எந்த தொடர்பும் இல்லை. திருமணத்துக்கு முன்பு நான் யாரையும் காதலிக்கவும் இல்லை. நீங்கள் தான் எனக்கு எல்லாம் என்றெல்லாம் தனது தரப்பு நியாயங்களையும், ஆசைகளையும் தெரிவித்து கணவரின் அன்புக்காக போராடினார்.
ஆனால் அதையெல்லாம் சித்த டாக்டர் அருண் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து அபிநயா மீது சந்தேகப்பட்டு இரவு நேரங்களில் திடீரென எழுந்து பார்ப்பது, நள்ளிரவில் அபிநயா செல்போனை எடுத்து பார்த்தால் யாரிடம் இந்நேரம் பேசுகிறாய் என்று கேட்பது என தினம் தினம் துன்புறுத்தி உள்ளார்.
இப்படி தொடர்ச்சியாக கணவர் மன ரீதியாக துன்புறுத்தி வந்ததால் அபிநயா இதற்குமேலும் இந்த உலகில் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்கிற முடிவுக்கு வந்தார்.
அதேநேரத்தில் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவரது மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கணவர் மீது தான் வைத்திருக்கும் பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்த அபிநயா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ரத்தத்தால் அவரது பெயரை தனது கையில் எழுதினார்.
இதன் பிறகே தூக்கில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அபிநயா தற்கொலை செய்வதற்கு முன்பு தனது கையில் “அருண்” என்று ஊசியால் கீறி இருந்ததை பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதனை போட்டோ எடுத்து தனது கணவரின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்ப அட்டாச் செய்து விட்டு அபிநயா அனுப்பாமல் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அபிநயாவின் செல்போன் பதிவில், பல உருக்கமான தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதில் டாட்டூ போட்டால் கூட அழிந்துவிடும், இது அழியாது, உன்னுடைய பெயர் எல்லோரும் பார்க்கிற மாதிரி இனிமே எப்போதுமே என் கையில் இருக்கும் என குறுஞ்செய்தியை அபிநயா அனுப்பி இருந்தது தெரிய வந்தது.
மேலும் உன்கிட்ட விளக்கம் கொடுப்பது வேஸ்ட் என்று தெரியும் இருந்தாலும் சொல்லாம விட முடியாது. நீ எப்போது எனக்கு தாலி கட்டினாயோ அப்பவே வாழ்க்கை முழுவதும் உன்கூட தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு எப்படி என்று தெரியாது. ஆனால் நான் அப்படித்தான் இருக்கேன். நான் எங்கேயும் யார் கூடேயும் போகவில்லை. நன் உனக்கு எப்பவும் துரோகம் மனசால கூட நினைக்கவில்லை. நான் பொறுமையா சொல்லி பார்த்துட்டேன், அழுதும் பார்த்துட்டேன். நான்கு நாட்களுக்கு முன்பு கூட சத்தியம் பண்ணினேன். ஆனால் நீ நம்பவில்லை. நீ இல்லாமல் நான் எங்கே போவேன். நீ நம்பினாலும் நம்பலனாலும் நான் உனக்கு உண்மையா தான் இருந்தேன். நீ கூட இல்லை என்றால் அது கடைசியாக தான் இருக்கும். உன் கூடவே தான் இருப்பேன்.. லவ் யூ என்றும் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார்.
திருமணமான 3 மாதத்தில் நடத்த சந்தேகத்தீயால் பெண் என்ஜீனியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைதான சித்த டாக்டர் அருண்குமாரை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்று பல இளம் தம்பதியினர் தங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை பேசி தீர்க்காமல் விட்டு விடுவதுதான் பெரிய பிரச்சினையாக முடிந்து விடுகிறது.

