பெங்களூரு ராமமூர்த்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மங்களூருவைச் சேர்ந்த சர்மிளா (34) என்ற பெண், பெங்களூரு ராமமூர்த்தி நகர், சுப்பிரமணிய லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராகப் பணியாற்றி வந்த அவர், தனது தோழியுடன் தங்கியிருந்தார். கடந்த 2-ம் தேதி அவரது தோழி சொந்த ஊருக்குச் சென்றதால், சர்மிளா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு சர்மிளா இருந்த வீட்டில் திடீரெனத் தீப் பிடித்தது. தீ மளமளவெனப் பரவி வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சர்மிளா தீயை அணைக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் சிக்கிய அவரால், தீயை அணைக்கவோ அல்லது வீட்டின் கதவைத் திறந்து வெளியேறவோ முடியாமல் போயுள்ளது.
அக்கம்பக்கத்தினர் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் சர்மிளா வீட்டிற்குள்ளேயே மயங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் தீக்காயங்கள் ஏதும் இல்லை என்பதால், கரும்புகையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ராமமூர்த்தி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

