திருவனந்தபுரம் மாவட்டம் விதுரா அருகே உள்ளது மருதன்மூடு. இது வனப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமமாகும். அடிக்கடி வனவிலங்குகள் இந்த கிராமத்திற்கு வருவது இயல்பு.. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இங்குள்ள ஒரு ஓடையில் அப்பகுதி மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓடை அருகே ஒரு ராஜநாகம் ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்த ஓடையில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஒடினர்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையின் உடனடி மீட்புப்படை சம்பவ இடத்திற்கு விரைந்தது. இப்படையை சேர்ந்த பெண் ஊழியரான ரோஷ்னி தனி ஆளாக மிகவும் சாகசமாக செயல்பட்டு அந்த ராஜநாகத்தை பிடித்தார். 18 அடிக்கு மேல் நீளம் கொண்ட இந்த ராஜநாகத்தின் எடை 20 கிலோ ஆகும்.
இதுகுறித்து ரோஷ்னி கூறியது: இதற்கு முன்பு பல விஷப்பாம்புகளை நான் பிடித்துள்ளேன். ஆனால் ராஜநாகத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்று வனத்துறை பயிற்சி அளித்துள்ளது. அதன்படி தான் நான் ராஜநாகத்தை பிடித்தேன். பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு ராஜநாகத்தை பிடிக்க வேண்டும் என்பது ஒரு பெரும் விருப்பமாக இருக்கும். எனக்கும் அந்த விருப்பம் நீண்ட நாட்களாக இருந்தது. ராஜநாகத்தை பிடிக்கும் போது எனக்கு பயம் எதுவும் இருக்கவில்லை. பயந்தால் இந்த வேலையை செய்ய முடியாது என்று இவ்வாறு அவர் தெரிவித்தார்.