Skip to content

கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்

கோவை மாநகரின் மையப்பகுதியான காட்டூர், பட்டேல் ரோடு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஆயில் கேன்கள், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்த உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால், கடையிலிருந்து வெளியேறிய தீப்பிழம்புகள் அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், அந்தப் பகுதி குறுகலான வீதிகளைக் கொண்டிருப்பதாலும், தீயின் வேகம் அதிகமாக இருப்பதாலும் தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்து அணைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்கள், போலீசாருடன் இணைந்து வாளிகளில் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடையில் இருந்த ஆயில் மற்றும் டயர்கள் வெடித்துச் சிதறியதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து, கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, வீரர்கள் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தீ விபத்திற்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவு காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!