மதுரை கீரைத்துரை மகாகாளிப்பட்டி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான் ஏடிஎம் ஒன்று உள்ளது. இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது. அதனை தொடர்ந்து திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அப்போது பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் சிலர் ஏடிஎம்மில் தீ மளமளவென எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த தீணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக ஏடிஎம் இயந்திரம் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தீ விபத்தானது மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஏடிஎம்மில் தீ விபத்து ஏற்பட்டதால் ஏடிஎம்மில் உள்ள பணம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானதாக கூறப்படுகிறது.