நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையில் கீழ் காலனி என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக ஒரு பிரபல உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த உணவகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உணவகத்தில் உள்ள புகைபோக்கி வழியாக வெளியேறிய தீ, மளமளவென பரவி கூரை வரை பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்ட கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு கடையை விட்டு உடனடியாக வெளியேறினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்களும் தீயை அணைக்க உதவினர். இந்த தீ விபத்தால் உணவகம் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் உணவகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.