திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒரு தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல சலூன் கடை உள்ளது.நேற்று இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை கடை ஊழியர்கள் 10 மணி அளவில் வந்து கடையை திறந்து உள்ளனர். நேற்று வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள் என எண்ணி தங்கள் பணிகளை தயார் படுத்திக் கொண்டு இருந்தனர். அப்பொழுது திடீரென்று சலூன் கடையின் உள்ளே இருந்து ஒரு பெரிய சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்கள்.இதையடுத்து சலூன் கடையிலிருந்து புகை வேகமாக வெளியேறியது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்நிலையில் சலூன் கடையிலிருந்து புகை அதிகமாக வெளியேறியது. இதனால் கடைக்குள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சலூன் கடை வெளிப்பகுதியில் இருந்த கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்க போராடினார். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சலூன் கடையில் இருந்த சோபா செட்,டேபிள் சேர் மற்றும் சலூனுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சேதமானது.இவற்றில் மதிப்பு ரூபாய் பல லட்சம் என்று கூறப்படுகிறது இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்ட்ரோல்மென்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் கூறும் பொழுது சலூன் கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக தெரிகிறது என்று கூறினார்.
