நாட்டின் குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
இந்த விழாவிற்கான முதற்கட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை 7 மணியளவில் சென்னை மெரினாவில் தொடங்கியது. இதில் ராணுவம், கடற்படை, வான்படை ஆகிய முப்படை வீரர்கள், தேசிய மாணவர் படை (NCC), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF), ஆர்.பி.எப் வீரர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. இவர்களுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல்களும் ஒத்திகையின் ஒரு பகுதியாக அரங்கேறின.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு, மெரினா காமராஜர் சாலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான பகுதியில் இன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல் மேலும் இரண்டு நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில், குடியரசு தின விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

