கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. இந்த நீர்வழி சுரங்க பாதை தற்போது நாட்டிலே முதல் முறையாக ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம் மேற்கொள்ளும் வகையில் சீரமைக்கப்பட்டு உள்ளது.
அதனை முதல்-மந்திரி பினராயி விஜயன் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த புதிய சிலாக்கூர் நீர் வழி சுரங்க பாதையில் ஸ்ரீ நாராயண குருவின் போதனை மற்றும் கேரள வரலாற்றை மையமாக கொண்ட 3 டி தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி-ஒலி நிகழ்ச்சி ஒளிபரப்படும். இது சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமையும் என்று கேரள நீர்வழி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் சுகாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகள் சுரங்க பாதையின் உள்ளே ஒளி ஒலி காட்சிகளை கண்டு ரசிக்க ஒரு மின்சார படகு அறி முகப்படுத்தப் பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் மேற்பரப்பில் மேப்பிங் நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும். இந்த ஒளி -ஒலி நிகழ்ச்சி ரூ.4.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவின் அழகிய நிலப் பரப்பு ஆகியவற்றுடன் பார்வையாளர்களை அழைத்து செல்லும் ஒரு 3 டி வீடியோ ஒளிபரப்பாகும். இது கேரளாவில் நீர் வழி சார்ந்த சுற்றுலாவுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும்’ என்றார்.

