திருச்சி தொகுதி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிடும், திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்கு எனது சிந்தனையில் எப்போதும் ஓர் சிறப்பிடம் இருந்து கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில், கடந்த 14.02.2025 அன்று டெல்லியில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து சேவை நிறுவன அலுவலகத்தில் அதன் உயர் அதிகாரிகளை சந்தித்து, திருச்சி தொகுதி விமான நிலையத்திற்கான பல கோரிக்கைகளை முன்வைத்தேன். அதன்படி திருச்சி விமான நிலையத்திற்கான கோரிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.
அதன் ஒரு பகுதியாக, இன்று (1.6.2025) ஒரே நாளில் திருச்சி – பெங்களூரு தினசரி (வாரம் எட்டு முறை) விமான சேவையையும், திருச்சி – ஹைதராபாத் தினசரி விமான சேவையையும், போயிங் ரக விமானங்களோடு தனது உள்நாட்டு போக்குவரத்தை திருச்சி முனையத்தில் விரிவுபடுத்தியுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். திருச்சி விமான நிலைய வளர்ச்சி வரலாற்றில் இதுவொரு முத்தான முன்னேற்றமாக நான் கருதுகிறேன். இதற்காக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கும், அதன் அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சி – பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு செல்லும் தினசரி உள்நாட்டு விமான சேவையால் திருச்சியிலிருந்து எளிதில் மக்கள் பிற முக்கிய நகரங்களுக்கு பயணித்து, அங்கிருந்து வெளிநாட்டு விமானத்தில், குறைந்த கட்டணத்தில், காத்திருப்பின்றி டிக்கெட் பெற்று பயணிக்கும் வாய்ப்பை பெற முடிகின்றது.
தொடர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான எனது பணி தொய்வின்றி தொடரும். அதில், திருச்சி விமான நிலைய மேம்பாடு முக்கிய பங்கு வகிக்கும். அதற்காக விரைவில் டெல்லியிலுள்ள விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளை மீண்டும் சந்திக்க உள்ளேன். அப்போது திருச்சியிலிருந்து விவசாய பொருட்களின் ஏற்றுமதிக்கும், பிற நாடுகளுக்கு சென்று உழைக்கும் மக்களுக்குமான கோரிக்கைகளை வழங்க திட்டமிட்டுள்ளேன். மக்கள் பயன்பெறவும், அவர்களின் பொருளாதார மற்றும் வாழ்க்கைத்தரம் உயரவும் இந்த முயற்சி வழிவகுக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
