அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசனத்தில் கரைபுரண்டு வெள்ளம் ஓடியதால்
75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்மடைந்ததால் தா.பழூர் டெல்டா விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.பொன்னாற்று பாசனவாய்க்காலை சரியாக தூர்வாராததே காரணம் எனவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை அடுத்த சீனிவாசபுரம், தாதம்பேட்டை கிராமத்தில் நவரைப் பட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை பணிக்கு விவசாயிகள் தயாராகி இருந்த சூழ்நிலையில், திடீரென அண்டை மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனை அடுத்து
மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடத்தில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட அந்த நீரானது கொள்ளிடத்திற்கும்,
பொன்னாற்று பாசனத்திற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் பொன்னாற்று பாசனத்தில் வெள்ளம் ஏற்பட்டு சீனிவாசபுரம், தாதம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரில் மூழ்கியே இருப்பதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தற்போது முளைக்கும் தருவாயில் உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலையில் மூழ்கியுள்ளனர். பொன்னாற்று பாசன வாய்க்காலை சரியாக தூர் வாராததே வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடித்து வருவதாகவும் இதனை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே விவசாயிகள் நலன் கருதி பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களை கணக்கிட்டு ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பொன்னாற்று பாசன வாய்க்காலை நன்கு ஆழப்படுத்தி முறையாக தூர் வார வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.