Skip to content

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

டெல்லி, அரியானாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடியும், வஜிராபாத் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1.38 லட்சம் கனஅடியும் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக டெல்லியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கரையோரத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்தனர். மேலும் டெல்லியில் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜரோடா கலான் பகுதியில் மங்கேஷ்பூர் வடிகாலின் 50 அடி நீளமுள்ள கரை உடைந்தது. இதனால் அந்த பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியது. துவாரகாவில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் பகுதிகளில் கிட்டத்தட்ட 5 அடி உயரத்துக்கு தண்ணீர் புகுந்துள்ளது. யமுனா பஜார் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் உணவு, தண்ணீர் மற்றும் கூடாரங்கள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதையடுத்து வெள்ளம் சூழ்ந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்ட மேம்பாலங்களில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கீதா காலனி மேம்பாலம் மற்றும் பழைய இரும்பு பாலத்தில் தங்கி உள்ளவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

error: Content is protected !!