கோவை மாவட்ட சரவணம்பட்டி பகுதியில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சகிதிவேல். இவர், உணவு மாதிரிகள் ஆய்வு செய்வதற்காக கடைகளுக்கு சென்ற போது, மாதிரி எடுக்காமல் இருப்பதற்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் வழங்குவதற்கும் லஞ்சம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து வணிகர் சங்கத்தினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்து உள்ளனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரி சக்திவேல் சரவணம்பட்டியில் உள்ள விஜயன் என்ற கடைக்காரரிடம் ரூ.10,000 லஞ்சம் கேட்டு, மறுத்த நிலையில் அவரை மிரட்டி நாளை ரெய்டுக்கு வருவேன் என்று எச்சரித்ததாக கூறப்பட்டு உள்ளது. மேலும், அவரது உதவியாளரும் பணம் கேட்டு கடைக்காரரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தொந்தரவுகள் காரணமாக கடைக்காரர் மன உளைச்சலுக்கு ஆளாகி, தொழில் செய்ய விடாமல் இப்படிச் செய்யும் போது தீக்குளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறேன் எனக் கடுமையாக பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதிகாரி விஜயனின் கடைக்கு மீண்டும் வருகை தந்து, அழுகிய காய்கறி வைத்து இருக்கிறீர்கள் என கூறி ரூ.2000 அபராதம் விதித்து, தனது மொபைல் எண்ணுக்கு GPay செய்யுமாறு கூறியதாகவும், ஆனால் ரசீது வழங்கப்படாமல் தவறான காரணங்களை வைத்து குற்றம் சாட்டியதாக புகார் கூறப்பட்டு உள்ளது.
இந்தச் சூழலில் சிறு வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறையினர் என்றாலே அச்சத்துடன் இருக்க வேண்டிய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. பெரிய மால்கள் மற்றும் நிறுவனங்களை தவிர்த்து சிறு கடைகளுக்கு மட்டும் அதிகாரிகள் அச்சுறுத்தலுடன் வருவது முறையல்ல என்றும் வணிகர் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் நேர்மையாக இருக்க, மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தனிச் சிறப்பு குழுவுக்கு வழங்கி, வாரந்தோறும் மாற்றி அமைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சரவணம்பட்டியில் நடைபெற்ற சம்பவத்தில் அதிகாரி சக்திவேல் இடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பணம் கேட்கும் சி.சி.டி.வி காட்சி வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.