கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான வைசாக் என்பவர், தனது உறவினரான இளம்பெண் ஒருவரை சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். வைசாக்கிற்கு ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமாகிவிட்ட நிலையிலும், அந்த இளம்பெண்ணுடன் அவர் தொடர்ந்து நெருக்கமான உறவில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வைசாக்கை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இதற்கு வைசாக் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இனி உயிர் வாழ விரும்பவில்லை என இளம்பெண் கூற, தானும் அவருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வதாக வைசாக் நயவஞ்சகமாக நம்ப வைத்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி கக்கோடி பகுதிக்கு அந்தப் பெண்ணை வரவழைத்த வைசாக், இருவரும் சேர்ந்து தூக்குப்போட்டுக்கொள்ளலாம் எனக் கூறி இரண்டு கயிறுகளைத் தயார் செய்துள்ளார். இருவரும் இருக்கை மீது ஏறி நின்று தற்கொலைக்குத் தயாராவது போல் நடித்த வைசாக், திடீரென கீழே இறங்கி இளம்பெண் நின்றிருந்த இருக்கையைக் காலால் தட்டிவிட்டு அவரைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதில் அந்தப் பெண் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அந்தப் பெண்ணின் உடலை வைசாக் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
இதன்பின்னர் தனது மனைவியை அந்த இடத்திற்கு வரவழைத்த வைசாக், இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எலத்தூர் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் வைசாக்கிடம் தீவிர விசாரணை நடத்தியும் உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியைக் கொன்று தற்கொலை நாடகமாடிய வைசாக்கை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

