Skip to content

ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம்-இபிஎஸ்!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் குலவிளக்கு திட்டம், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை, அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு கட்டித் தருதல் ஆகியவை முக்கிய அறிவிப்புகளாக உள்ளன.

மேலும், அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என்றும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்தத் திட்டங்கள் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.எம்ஜிஆரின் பிறந்தநாள் நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆரின் கொள்கைகள் மற்றும் சமூக நீதி புரட்சி இன்றும் தமிழக மக்களின் மனதில் நிலைத்திருப்பதாகவும், அவரது வழியில் தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்றும் உறுதியளித்தார்.

இந்த அறிவிப்புகள் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எம்ஜிஆரின் சிலைகள், கட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிகழ்வு தமிழக அரசியலில் அதிமுகவின் தேர்தல் தயாரிப்புகள் தொடங்கியுள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

error: Content is protected !!