சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களின் கட்டடங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்படுகின்றன.
பள்ளிகளின் கல்வித் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக் கூடங்களை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள் தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர். இதுபற்றி பரிசீலனை செய்து சமுதாய நலக் கூடங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக துறைமுகத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடப் பணிகள் நடக்கின்றன. கீழ் பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரத்யேக பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது.
முதல் தளத்தில் டைனிங் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பந்தியில் ஒரே சமயத்தில் 600 பேர் அமர முடியும். இரண்டாம் தளத்தில் கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் தங்கும் வகையில் 8 அறைகள் அமைக்கப்படுகின்றன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும். இதேபோல் கொளத்தூர் தொகுதியிலும் சமுதாய நலக்கூடப் பணிகள் நடந்து வருகின்றன. இது ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஒட்டுமொத்தமாக 180 கோடி ரூபாய் மதிப்பில் 16 சமுதாய நலக் கூடப் பணிகள் நடந்து வருகின்றன.
தூய்மை பணியாளர்களுக்கு வருகிற 15-ம் தேதி உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். இது தூய்மை பணியாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த முறையை விட இந்த முறை மழை குறைவாகவே பெய்துள்ளது. மாநகராட்சி சார்பில் ஆக்ஸ்ட் மாதம் முதலே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழை வரக்கூடிய சூழலை பார்த்துக்கொண்ட பின் தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

