Skip to content

டில்லியில் ஜி-20 மாநாடு… வரலாறு காணாத பாதுகாப்பு .. முக்கிய தலைவர்கள் வருகை நேரம் அறிவிப்பு..

உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மாநாடு நாளை தொடங்குவதால் பெரும்பாலான தலைவர்கள் இன்று டெல்லியை வந்தடைகிறார்கள். பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி விட்டனர். இதில் முதல் நபராக நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு கடந்த 5-ந்தேதி டெல்லி வந்தார். அவரை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் பாகெல் வரவேற்றார். அடுத்ததாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் தன் மனைவியுடன் நேற்று காலை 6.15 மணிக்கு டெல்லி வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய கப்பல்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக் வரவேற்றார். இதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று மாலை 6.55 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையத்தில் தரையிறங்குகிறார். அவரை மத்திய சிவில் விமான போக்கு வரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்கிறார். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜோ பைடன் வருவதில் திடீர் சந்தேகம் எழுந்தது. ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால், ஜி-20 உச்சி மாநாட்டில் அவரது பங்கேற்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜோ பைடன் வருகையை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதிக்குரிய மிகவும் பாதுகாப்பு மிகுந்த காரான ‘தி பீஸ்ட் காடில்லாக்’ காரும் டெல்லி வருகிறது. அமெரிக்காவின் போயிங் சி-17 குளோபல்மாஸ்டர்-3 என்கிற போர் விமானம் மூலம் இந்த கார் எடுத்து வரப்படுகிறது. இந்த காரிலேயே ஜோ பைடன் டெல்லியில் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபரின் வருகையைத் தொடர்ந்து அடுத்த 5 நிமிடங்களில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லியில் இறங்குகிறார். இவரை மத்திய தகவல் தொழில்நுட்ப இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரைத் தொடர்ந்து சீன பிரதமர் லீ கியாங் இரவு 7.45 மணிக்கு வருகிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பதிலாக பிரதமர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல்-நஹ்யான் இரவு 8 மணிக்கும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரவு 8.15 மணிக்கும், பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டா சில்வா இரவு 8.45 மணிக்கும், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ இரவு 9.15 மணிக்கும், துருக்கி அதிபர் எர்டோகன் இரவு 10.15 மணிக்கும், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் இரவு 10.45 மணிக்கும் டெல்லி வருகிறார்கள். முன்னதாக அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸ் காலை 6.20 மணிக்கும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி காலை 8.50 மணிக்கும், ஆப்பிரிக்க ஒன்றிய அதிபர் அசாலி அசவுமானி காலை 10.25 மணிக்கும், தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா காலை 11.45 மணிக்கும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பகல் 12.30 மணிக்கும் டெல்லி வந்து சேருகிறார்கள். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பகல் 1.40 மணிக்கு வருகை தர இருக்கிறார். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிற்பகல் 2.15 மணிக்கும், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மாலை 4.50 மணிக்கும், கொரிய குடியரசின் அதிபர் சுக் யீல் யூன் மாலை 5.10 மணிக்கும், எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி மாலை 5.45 மணிக்கும், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மாலை 6.15 மணிக்கும் டெல்லியை வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களைத் தொடர்ந்து இரவு 8.10 மணிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வருகிறார். இவரை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி எல்.முருகன் வரவேற்கிறார். இதைப்போல நாளையும் சில தலைவர்கள் டெல்லி வருகின்றனர். இதில் முக்கியமாக ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பகல் 12.35 மணிக்கும் டெல்லிக்கு வருகின்றனர். பல அடுக்கு பாதுகாப்பு இவ்வாறு உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம், உலக தலைவர்கள் தங்கும் ஆடம்பர விடுதிகள் போன்றவை பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!