நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படாது. 50 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் தொடங்கும். காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும். ஏற்கனவே ஒரு மந்திரி சூடுபட்டது போதாதா? நாங்களும் சூடுபடணுமா ?காந்தி மார்க்கெட் அங்கே தான் இருக்கும்.அதில் எந்த மாற்றமும் இல்லை. த.வெ.க
தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரை அங்கிள் என விமர்சனம் செய்துள்ளாார்.
அவருடைய தராதரம் அவ்வளவுதான். ஒரு மாநில முதலமைச்சரை, பெரிய கட்சியின் தலைவரை, 50 ஆண்டு காலமாக அரசியலில் இருப்பவரை நேற்று அரசியலுக்கு வந்தவர் சொல்லுவது, தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அழகல்ல.அவருக்கு மக்கள் நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் சரியான பதில் சொல்வோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. 50 பேர் கூடிட்டாங்க என்பதற்காக எது வேணுமானாலும் பேசுவது சரியாக இருக்குமா? சரியாக இருக்காது .
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
பேட்டியின் போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,
மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,பகுதி செயலாளர் மோகன்தாஸ்,மண்டல குழு தலைவர் துர்கா தேவி,
கவுன்சிலர்கள் கலைச்செல்வி ஜெகநாதன்,ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.