Skip to content

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்: பஞ்சப்பூர் புதிய வளாகம் குறித்து முக்கிய தீர்மானம்

திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 56-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவராக கே.டி.தங்கராஜ், செயலாளராக கே.ஏ.எச்.ஜமால் முஹம்மது, பொருளாளராக எம். காதர் மைதீன் ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது.

இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின்படி, கடந்த 2020-ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது கள்ளிக்குடி மார்க்கெட் இடமாற்றத்தை எதிர்த்து வியாபாரிகளுக்கு ஆதரவாக இருந்த தற்போதைய அரசு, இப்போது பஞ்சப்பூர் புதிய காய்கறி வளாகத்தை அவசர கதியில் திறக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட்டை 60 கோடியில் புனரமைத்து, அருகில் உள்ள மகளிர் சிறைச்சாலையை அகற்றி விரிவாக்கம் செய்வோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, அதற்கு மாறாகச் செயல்படுவதையும் சங்கத்தினர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

பஞ்சப்பூர் புதிய காய்கறி மார்க்கெட் திட்டத்தில் அரசு உறுதியாக இருந்தால், வியாபாரிகளின் மூன்று முக்கிய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய மார்க்கெட் தரைத்தளத்தில் மட்டுமே அமைய வேண்டும், கடைகள் அனைத்தும் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பாணியில் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு வியாபாரிகளுக்கே கடைகளைச் சொந்தமாக வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், எங்களது இந்தத் தீர்மானங்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்றும் வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், 1000 முதல் 2000 சதுர அடி கடைகளில் ஏராளமான தொழிலாளர்களும் வெளியூர் விவசாயிகளும் தங்குவதால் ஒவ்வொரு கடையின் உள்ளேயே தனித்தனி கழிப்பிட வசதி அவசியம் தேவை எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிய மார்க்கெட்டில் வெளி ஊர் வியாபாரிகளுக்கோ அல்லது வெளி நபர்களுக்கோ எக்காரணம் கொண்டும் கடைகளை ஒதுக்கக் கூடாது என்பதிலும் வியாபாரிகள் சங்கம் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!