தஞ்சை, அதிராம்பட்டினம் நகர இந்து முன்னணி சார்பில் கடந்த சில வருடங்களாக விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 36 ஆவது ஆண்டாக விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. முன்னதாக பட்டுக்கோட்டையில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையில் இருந்து வந்த விநாயகர் சிலைகளுடன் சேன்டாகோட்டை, மாளியக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், மழவேனிற்காடு ஆகிய கிராமங்களில் உள்ள விநாயகர் சிலைகளுடன் சரியாக நான்கு மணி அளவில் அதிராம்பட்டினம் வண்டி பேட்டையை வந்தடைய அங்கு அதிராம்பட்டினம் இந்து முன்னணி சார்பில்
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுடன் மொத்தம் 51 சிலைகள் ஒன்று சேர்க்கப்பட்டது.
பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு அதிராம்பட்டினம் நகரத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார் ,மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வி எச் பி ஒன்றிய செயலாளர் நாக அருணாசலம் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா சிறப்புரையாற்ற நல்வழி சித்தர் வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்த விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு எஸ் பி ராஜாராம் தலைமையில் 2 ஏ டி எஸ் பிக்கள், ஐந்து டிஎஸ்பிக்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், 30 எஸ் ஐ க்கள் என 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே உளவு பிரிவு போலீசார்கள் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வண்டிப்பட்டையில் இருந்து துவங்கிய விநாயகர் ஊர்வலம் சேர்மன்வாடி, பழஞ்செட்டி தெரு, பஸ் ஸ்டாண்ட், காலேஜ் முக்கம் வழியாக ஏரிப்புறக்கரை சென்று அங்கே 51 விநாயகர் சிலைகள் படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வங்கக்கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர் சிவா சூரை சண்முகம் மற்றும் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.