Skip to content

அதிசயங்கள் பல நிறைந்த கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயம்…

அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரியநாயகி உடனுரை பிரகதீஸ்வரர் திருக்கோயில் பல அதிசயங்களைக் கொண்டது.

இராஜேந்திர சோழன் கங்கையை வெற்றி கொண்டதை நினைவு கூறும் விதமாக இந்நகரம் உருவாக்கப்பட்டது. கி.பி.1022 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றார். இந்த வெற்றியின் காரணமாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் பெற்றார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு 250 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய சோழ மன்னர் ராஜராஜ சோழனுக்கும் திரிபுவனமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் ராஜேந்திர சோழர். இவரது இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி.1012 முதல் கி.பி.1044 வரை ஆட்சி செய்த இவர் கடல் கடந்து சென்று பல நாடுகளை வென்ற காரணத்தினால் “கடாரம் கொண்டான்’ என்ற பெயர் பெற்ற பெருமை உடையவர்.

இராஜேந்திரன் சோழன் தனது படையை இந்தியாவின் வட பகுதிகளுக்கு புனித கங்கை நதியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுப்பினார். சோழப்படையினர் வழியில் பல எதிரிப் படைகளை தோற்கடித்து வெற்றியுடன் தாய்நாட்டிற்கு திரும்பினர். இதனால் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டப்பெயரையும் அவர் பெற்றார். இவர் ஒரு புதிய தலைநகரை நிறுவியபோது அதற்கு கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் சூட்டினார். கங்கையிலிருந்து கொண்டு வந்த புனிதநீரைப் பயன்படுத்தி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.

தன் தந்தையைப் போலவே கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரியதொரு கோவிலைக் கட்டி பிரம்மாண்டமான லிங்கத்தையும் நந்தியையும் பிரதிஷ்டை செய்தவர். இத்தலத்திலும் சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும் இக்கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இக்கோவிலில் உள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய சிவலிங்கம் ஆகும்.

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வர்ர் ஆலய லிங்கம்தான். தஞ்சை பெரிய கோவில் லிங்கம் 12.5 அடி உயரமும் 55 அடி சுற்றளவும் உடையது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம் 13.5 அடி உயரமும் 60 அடி சுற்றளவும் உடையது. இத்தலத்து சிவலிங்கம் ஒரே கல்லால் உருவாக்கப்பட்டது.

இத்தலத்து லிங்கத்தின் கீழே சந்திரகாந்தக்கல் வைக்கப்பட்டுள்ளதால் கோடை காலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெப்பத்தையும் உண்டாக்க வல்லது.

அம்பாள் பெரியநாயகியும் பிரம்மாண்ட ரூபத்தில் ஒன்பதரை அடி உயரத்தில் அருள்பாலிக்கிறாள். அருள்மிகு பெரியநாயகி அம்பாளை நாம் நிமிர்ந்து பார்த்துதான் வணங்க முடியும்.

இத்தலத்தில் உள்ள சரஸ்வதிதேவி மற்றும் லட்சுமிதேவி தியானக்கோலத்தில் வீற்றிருப்பதால் ஞான சரஸ்வதி என்றும் ஞான லட்சுமி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இராஜேந்திர சோழனின் குலதெய்வமான துர்க்கை இத்தலத்தில் ஒன்பது வயது சிறுமியின் வடிவம் தாங்கி புன்னகை முகத்துடன் இருபது திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த அபூர்வமான கோலத்தில் அருள் புரிகிறாள்.

இராஜேந்திர சோழன் கோவிலுக்கு வந்ததும் முதலில் துர்க்கையை வழிபட்ட பின்னரே சிவனை வணங்குவார் என்றும் கூறப்படுகிறது.

இக்கோவிலில் பிரம்மை என்று அழைக்கப்படும் ஒரே கல்லால் தாமரைப்பூ வடிவத்தில் சூரிய தேவன் 9 குதிரைகளை பூட்டி ரதத்தில் செல்வது போன்று அவரது ரதத்தில் மற்ற நவக்கிரகங்கள் அமர்ந்து செல்வது போன்று ஒரே கல்லாலான நவகிரக சிற்பம் மிகவும் சிறப்பு பெற்றது.

பிரம்மாண்ட இக்கோவிலின் கோபுரத்தின் நிழல் எப்பொழுதும் தரையில் தெரிவதில்லை என்பதும் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.

பூகம்பம் உள்ளிட்ட அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் எதிர்கொண்டு கட்டிடக்கலைக்கு சான்றாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!