Skip to content

திருச்சி ரயிலில் கஞ்சா பறிமுதல் , போலீசார் அதிரடி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள  ஹவுரா நகரில் இருந்து  தமிழகத்திற்கு வரும், ஹவுரா – கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்  ரயில் (T.no: 12665) இன்று அதிகாலை 2. 30 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தின் 4 வது பிளாட்பாரத்திற்கு வந்தது.

பயணிகள் இறங்கிக்கொண்டும்,  தென் மாவட்டங்களுக்கு பயணிக்க  ரயிலில் ஏறிக்கொண்டும் இருந்தனர்.திருச்சி ரயில் நிலைய  போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா உத்தரவின் பேரில்  எஸ்.எஸ்.ஐகள் அபிராமி,  சுப்பிரமணியன்,  ஏட்டுகள்  வீரமலை, ஜெயந்தி,  போலீஸ்காரர்கள் சேகர்,   திவாகர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்  ரயிலில் திடீர் சோதனை நடத்தினர்.

சந்தேகப்படும்படியான நபர்கள் தென்படுகிறார்களா,  தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் எடுத்து வருகிறார்களா என  ஒவ்வொரு பெட்டியிலும் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது ரயிலின் பின்பக்கம் உள்ள  பொது பெட்டியில் கேட்பாரற்று ஒரு வெள்ளை நிற  கட்டை பை கிடந்தது. அந்த பைக்கு யாரும் உரிமை கோரவில்லை.

எனவே ரயில்வே போலீசார்  அந்த பையை  கைப்பற்றி சோதனை போட்டனர்.  அதில் சுமார் 2 கிலோ மதிக்கத்தக்க கஞ்சா இருந்தது. அவற்றை கைப்பற்றி திருச்சி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் போலீசாரை கண்டதும் அதனை விட்டு விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என தெரிகிறது.

பின்னர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு, திருச்சி. SSI. விஸ்வநாதனிடம் மேல் விசாரணைக்காக அந்த கஞ்சா பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டது.  அந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார் என அவர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்துவார்கள்.

இந்த சோதனை குறித்து ரயில்வே போலீசார் கூறும்போது திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் அனைத்தும் 24 மணி நேரமும் போலீசாரின் கண்காணிப்பில்  உள்ளது. சந்தேகப்படும்படியான நபர்கள், பொருட்களை போலீசார் சோதனை  நடத்தி வருகிறார்கள். எனவே பயணிகள்,  தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் ரயிலில் எடுத்து வரக்கூடாது என தெரிவித்தனர்.

error: Content is protected !!