கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில், சமீபத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் அப்பகுதியில் உள்ள அன்சரி தர்கா அருகே கடந்து சென்றபோது, வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஹர்ஷிதா என்ற பெண், தனது கைகளால் தர்காவை நோக்கி அம்பு எய்வது போன்ற சைகையைக் காட்டியுள்ளார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், குறிப்பிட்ட பெண்ணின் செயல் ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக பெலகாவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஊர்வலத்தைத் தலைமை தாங்கி நடத்திய சுப்ரீத், ஸ்ரீகாந்த், பெட்டப்பா, கங்காராம், சிவாஜி, கல்லப்பா மற்றும் சைகை காட்டிய பெண் ஹர்ஷிதா ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

