தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபால் (32 ). இவரது மனைவி அன்னலட்சுமி. இந்த தம்பதிக்கு அஜிதா (4) என்ற பெண்குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தனது மகளை அருகில் உள்ள அண்ணன் வீட்டில் விட்டு விட்டு கோபால் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.
அங்கு 2 கல் தூண்களுக்கு இடையில் துணி காய வைக்கும் கயிறு கட்டி இருந்த நிலையில் அதன் அருகில் சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஒரு பக்க கல் தூண் இடிந்து சிறுமி மீது விழுந்தது. இதில் சிறுமியின் தலை மற்றும் காதில் இருந்து ரத்தம் வழிந்து அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கோபால் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.