Skip to content

அரசு பஸ்சில் கடத்திய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்..

கேரளாவில் இருந்து கோவையை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கொண்டு வரப்படுகின்றதா? என்று சோதனை நடந்தது. அப்போது, அதில் ஒரு நபர் சந்தேகப்படும் வகையில், பெரிய பேக்குடன் அமர்ந்திருந்தார். அந்த பேக்கை திறந்து போலீசார் சோதனை செய்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில், தங்க கட்டிகளை கடத்தி வந்தது கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த வர்கீஸ் என்பவரின் மகன் நிபின் (29) என்பது தெரியவந்தது. அவர் பணியாற்றி வரும் ஜவுளிக்கடையின் உரிமையாளர் ரகுமான் (42) என்பவர் கோவை உக்கடம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரிடம் கொடுத்து வரும்படி, தங்க கட்டிகளை கொடுத்து அனுப்பியதாக போலீசாரிடம் நிபின் கூறினார். இதையடுத்து போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி தங்கக்கட்டிகள் கொண்டு வந்த நிபினை கைது செய்து அவரிடமிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 6 கிலோ 140 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கைதான நிபின் கோவை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

error: Content is protected !!