சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாகக் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ‘கிடுகிடு’வென உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 1,34,400 என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியது. இந்த அதீத விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று தங்கம் விலை மளமளவெனச் சரிந்து ஆறுதல் அளித்துள்ளது.
இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,800 குறைந்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் இரண்டாவது முறையாகச் சவரனுக்கு ரூ. 2,800 குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 சரிந்துள்ளது. தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 1,26,800-க்கும், ஒரு கிராம் ரூ. 15,850-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ. 99,520-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இடையில் கிடுகிடுவென உயர்ந்த விலை தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று பிற்பகலில் அதிரடியாகக் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10-ம், கிலோவுக்கு ரூ. 10,000-மும் குறைந்து, தற்போது ஒரு கிராம் ரூ. 405-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 4,05,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் கணிசமாகச் சரிந்துள்ளதால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

