Skip to content

ஒரே நாளில் ரூ.4,120 வரை உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது.

ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், சவரனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் தினமும் தாறுமாறாக அதிகரிக்கிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.12-ம், கிலோவுக்கு ரூ.12 ஆயிரமும், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22-ம், கிலோவுக்கு ரூ.22 ஆயிரமும் எகிறி, ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ ரூ.3.5 லட்சத்தை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், அது இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே அந்த நிலையை எட்டிவிடும் என்றே சொல்லப்படுகிறது.

தங்கம் விலை
இந்நிலையில் இன்று 2-வது முறையாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.515 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.14,415-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக இன்று காலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை
வெள்ளி விலை தற்போது கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,45,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம், வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள புதிய உச்சம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!