கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் தங்க கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள் உஷாரானார்கள். அவர்கள் புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வெளியே தயாராக இருந்தனர்.
அப்போது, வெளியே வந்த சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரித்ததில், அவர் தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், வெளிநாட்டு தங்கம் கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் ரெயில் வழியே, கொண்டு வரப்பட்டு உள்ளது.
அதனை உருக்கி, சட்ட விரோத வகையில் உருமாற்றம் செய்து, உள்ளூரில் கள்ளச்சந்தையில் விற்க முயன்றுள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14.13 கோடியாகும். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
அவர்களிடம் இருந்து ரூ.13.41 கோடி மதிப்பு கொண்ட 8.286 கிலோ தங்கம், ரூ.19.67 லட்சம் மதிப்பிலான 7.35 கிலோ வெள்ளி மற்றும் இந்திய மதிப்பில் ரூ.51.74 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சுங்க சட்ட பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

