கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு நடைபெற்று வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சிறப்பு காலம் வரை தொகுப்பு ஊதியம் மதிப்பூரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் சட்டபூர்வமான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
21 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், விடுமுறை தினங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும், பெண் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அமல்படுத்த வேண்டும், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலர்கள் ஆகியோரை அரசு ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்போட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய மாவட்ட தலைவர் ஜெகநாதன், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறினார். சென்னையில் எங்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியதாகவும் ஆனால் தற்பொழுது வரை அது நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். ஜனவரி முதல் வாரத்திற்குள் தங்களை அழைத்து பேசவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

