Skip to content

அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் கொள்ளை

தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி. அரசு பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு தனது குடும்பத்தினருடன் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று வீட்டு பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக கஜலட்சுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கஜலட்சுமி தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் வசிக்கும் தனது உறவினர் ராம்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ராம்குமார் கஜலட்சுமியின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3.50 மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தாலுகா போலீசுக்கு ராம்குமார் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாயிருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும்

தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 11 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை உக்கடை மேலத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (73). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இவரது மனைவி சரோஜா (69). இவர்களின் மூன்றாவது மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மகளின் சிகிச்சைக்காக குணசேகரன் தனது குடும்பத்தினருடன் தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் கவுரி நகர் 5ம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

குணசேகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பட்டுக்கோட்டையில் உள்ள தங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்த தகவல் சரோஜாவுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ரெட்டிப்பாளையத்தில் தற்போது வசித்து வரும் வீட்டை பூட்டிக் கொண்டு சரோஜா பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று மதியம் சரோஜா ரெட்டிப்பாளையம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது அறையில் பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி விளக்கு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் சரோஜா புகார் செய்தார். இதன்பேரில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!