அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாகி காதர் ஷெரீப் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அல்ஹாஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் முன்னிலை வகித்து நிகழ்வை சிறப்பித்தனர்.
பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் ரோஸி ஆகியோர் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரை வழங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் அவர்கள் தனது உரையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய மகனின் வகுப்பு ஆசிரியரிடம் கற்றுக் கொடுக்க வேண்டிய மதிப்புகள் குறித்து எடுத்துரைத்த வரலாற்றுச் சம்பவத்தை குறிப்பிடினார். பட்டம் பெறுவது ஒரு சமூக அந்தஸ்தாக மட்டுமல்லாது, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனித வளமாக பட்டதாரிகள் உருவாக வேண்டும் என்பதையும் அவர் விரிவாக விளக்கினார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் ரோஸி அவர்கள் பேசும்போது, மாணவிகள் பெருந்திரளாக பட்டம் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார். “கல்வியில்லாத நிலம் கலர் நிலம் போன்றது; அந்நிலத்தில் பயிர்கள் வளரலாம், ஆனால் நல்ல புதல்வர்கள் உருவாக முடியாது. பெண் சமூகம் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு கல்வி அத்தியாவசியமான தேவையாகும்” என அவர் எடுத்துரைத்து, இவ்வளவு மாணவிகள் பட்டம் பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சியான தருணம் என குறிப்பிட்டார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 610 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக தரவரிசையில் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் அதிக இடங்களைப் பெற்று பதக்கங்களை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை தலைவர் முகமது அலி மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக மேற்கொண்டனர். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக மற்றும் ஆய்வக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெருந்திரளாக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

